சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி !
அபுதாபி: ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி அபுதாபியில் நடந்தது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் தேர்வு செய்தது.
ராஜஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கில் மிக மோசமாக சொதப்பிய சிஎஸ்கே அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே அணியில் சாம் கரன், டு பிளசிஸ், வாட்சன், ராயுடு, தோனி, ஜடேஜா, ஹசல்வுட், சாவ்லா, சாகர், ஷர்துல் தாகூர் ஆகியோர் ஆடினார்கள். டாஸ் பேட்டிங் தேர்வு செய்த சிஎஸ்கே தொடக்கத்தில் இருந்தே மிக மோசமாக சொதப்பியது.
சிஎஸ்கே மோசமான ஆட்டம்:
ஆரம்பத்தில் இருந்து வரிசையாக சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தனர். முதல் 5 ஓவருக்குள் 2 விக்கெட் விழுந்தது. அதன்பின் 10 ஓவருக்குள் 4 விக்கெட் விழுந்தது. இதனால் சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் மொத்தமாக முடங்கியது.
சிஎஸ்கே பேட்டிங்:
சிஎஸ்கே சார்பாக இறங்கிய டு பிளசிஸ் 10 ரன்களுக்கும், வாட்சன் 8 ரன்களுக்கும், சாம் கரன் 22 ரன்களுக்கும், ராயுடு 13 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள். அதன்பின் நிதானமாக டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய தோனியும் 28 ரன்கள் இருக்கும் போது ரன் அவுட் ஆனார். ஜடேஜா மட்டும் சிறிது நேரம் நிலைத்து ஆடினார் . அவர் 30 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். ஜாதவ் எப்போதும் போல கடைசியில் கட்டை போட்டு 7 பந்தில் 4 ரன்கள் அடித்தார். இதனால் சிஎஸ்கே 20 ஓவரில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பாக ஆர்ச்சர், தியாகி, ஷ்ரேயாஸ் கோபால், திவாதியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
ராஜஸ்தான் பேட்டிங்:
அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 19 ரன்னுக்கும், உத்தாப்பா 4 ரன்னுக்கும், சாம்சன் டக் அவுட்டும் ஆனார். ஆனால் அடுத்து இறங்கிய ஸ்மித் மற்றும் பட்லர் நிதானமாக ஆடினார்கள். ஸ்மித் 34 பந்தில் 26 ரன்களும், பட்லர் 48 பந்தில் 70 ரன்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் எளிதாக வெற்றி:
இறுதியில் ராஜஸ்தான் அணி 17.3 பந்தில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி எளிதாக வென்றது.

