IPL 2020: சென்னையை வீழ்த்தி மும்பை அணி வெற்றி – பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது சென்னை !
ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் 41வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி இந்த எளிய இலக்கை விக்கெட் இழப்பின்றி ஆடி எளிதாக வெற்றி பெற்றது.
சிஎஸ்கே பேட்டிங்:
சிஎஸ்கே அணியின் பேட்டிங் இதுவரை இந்த சீசனில் இல்லாத அளவு மோசமாக அமைந்தது. முதல் ஓவரில் ருதுராஜ் கெயிக்வாட் டக் அவுட் ஆனார். சிஎஸ்கே அணியில் வரிசையாக ராயுடு 2, டுபிளெசிஸ் 1, ஜெகதீசன் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
3 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது சிஎஸ்கே அணி. அடுத்து ஜடேஜா 7, தோனி 16, தீபக் சாஹர் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் 43 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து தவித்தது சிஎஸ்கே. அப்போது சாம் கர்ரன் மட்டுமே தனி ஆளாக நின்று பொறுப்பாக ஆடினார்.
சாம் கர்ரன், பின்வரிசை வீரர்கள் ஷர்துல் தாக்குர், இம்ரான் தாஹிர் ஆகியோருடன் கூட்டணி அமைத்து ரன் குவித்தார். சாம் கர்ரன் அரைசதம் கடந்து, சிஎஸ்கே அணியை 100 ரன்களை கடக்கச் செய்து மானத்தை காப்பாற்றினார். 20வது ஓவரின் கடைசி பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பும்ரா 2, ராகுல் சாஹர் 2 விக்கெட் வீழ்த்தினர். நாதன் கோல்டர் நைல் 1 விக்கெட் வீழ்த்தினார்.
மும்பை பேட்டிங்:
அடுத்து 115 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு க்வின்டன் டி காக், இஷான் கிஷன் நல்ல துவக்கம் அளித்தனர். ரோஹித் சர்மா இல்லாததால் கிஷன் அவரது இடத்தில் பேட்டிங் செய்தார். அவர்கள் இருவரின் விக்கெட்டை சிஎஸ்கே அணியால் கடைசி வரை வீழ்த்த முடியவில்லை.
மும்பை வெற்றி:
டி காக் 37 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தது. 10 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி மும்பை அணி எளிதாக வெற்றி பெற்றது.

