Monday, March 2, 2026
National

வெளிநாட்டவர்களுக்கும் அமீரகக் குடியுரிமை (UAE Citizenship): புதிய சட்டத்தை வெளியிட்ட துபாய் ஆட்சியாளர் !!

அமீரகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சிறப்புத் திறமை வாய்ந்தவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு அமீரக குடியுரிமையை (UAE Citizenship) வழங்க அனுமதிக்கும் புதிய சட்டத் திருத்தங்களை அமீரக அரசு வெளியிட்டுள்ளது. இந்த குடியுரிமையைப் பெற தகுதியானவர்களாக விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் அடங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய சட்ட திருத்தம் குறித்த அறிவிப்பை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் நேற்று சனிக்கிழமை அறிவித்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “புதிய வழிமுறைகள் எங்களின் வளர்ச்சிப் பயணத்திற்கு பங்களிக்கும் திறமைகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், அமீரக அமைச்சரவை, உள்ளூர் எமிரி நீதிமன்றங்கள் மற்றும் நிர்வாக சபைகள் அமீரக குடியுரிமைக்கு தகுதியானவர்களை “ஒவ்வொரு பிரிவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட தெளிவான அளவுகோல்களின் கீழ்” பரிந்துரைக்கும் என்று இந்த புதிய சட்ட நடைமுறை குறித்து அவர் விளக்கியுள்ளார்.

அமீரக பாஸ்போர்ட்டை பெறும் வெளிநாட்டவர்கள் அவர்களின் தற்போதைய குடியுரிமையை தொடர்ந்து வைத்திருக்கவும் இந்த புதிய சட்டம் அனுமதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.