Monday, March 2, 2026
NationalWeather

அமீரகம்: கடும் பனிமூட்டத்தால் முக்கிய சாலைகளில் வேகக்கட்டுப்பாடு விதிப்பு…மீறினால் அபராதம்! காவல்துறை எச்சரிக்கை!

அமீரகத்தில் இன்று புதன்கிழமை காலை பல்வேறு பகுதிகளை மூடுபனி சூழ்ந்தது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முக்கிய சாலைகளில் 80 கி.மீ வரை அனுமதியளித்து வேகத்தைக் குறைப்பதாக அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையம் ஒரு மூடுபனி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை மூடுபனி நிலவும் என்றும் தெரிவுநிலை (Visibility) 1,000 மீட்டருக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், அபுதாபியில் பனிமூட்டமான காலநிலையில் வாகனம் ஓட்டும்போது திருத்தப்பட்ட வேக வரம்புகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

காவல்துறையின் அறிவிப்பில், அல் ஐன் – துபாய் சாலை (அல் ஃபோவஹ் – அல் ஹியார்), முகமது பின் ரஷீத் சாலை (அபுதாபி – துபாய்), மக்தூம் பின் ரஷீத் சாலை (அபுதாபி – துபாய்), ஸ்வீஹான்- அல் சாத் சாலை மற்றும் நஹில் – அல் ஹியார் சாலையில் வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பெடரல் போக்குவரத்து சட்டத்தின்படி, மூடுபனியின் போது பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதற்கான வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு Dh500 அபராதம் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.