அபுதாபியில் தென்பட்ட ‘லேப்விங்ஸ்’ என்றழைக்கப்படும் அரியவகை ஆள்காட்டி பறவைகள் !
அபுதாபியில் ‘லேப்விங்ஸ்’ என்றழைக்கப்படும் மிக அபூர்வமான ஆள்காட்டி பறவைகள் தென்பட்டுள்ளது. இப்பறவைகள் நடமாடும் காட்சிகள் அபுதாபி-துபாய் எல்லைப்பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருப்பு நிற மூக்குடைய கரையோரத்தில் வாழும் பறவையினம் ‘லேப்விங்ஸ்’ என்றழைக்கப்படும் ஆள்காட்டி பறவையாகும். இது மனிதர்களையோ அல்லது பிற எதிரி விலங்கினங்களையோ கண்டால் ஒலியெழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும். இக்காரணத்தால் இது ஆள்காட்டி பறவை என்றழைக்கப்படுகிறது. இப்பறவை தரையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.
இவற்றில் பெரிய வகை பறவைகள் சுமார் 35 செ.மீ. நீளம் வரை இருக்கும். பெண் மற்றும் ஆண் பறவைகள் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். ஆனால் ஆண் பறவையின் இறக்கைகள் சிறிது நீண்டும், கால் மணிக்கட்டு சற்றே வெளியில் நீட்டியபடியம் இருக்கும்.
அமீரகத்தில் இப்பறவை மிக அரிதாக காணப்படும் ஒன்றாகும். இந்த ஆண்டில் தற்போது அதிகபட்சமாக 34 ஆள்காட்டி பறவைகள் வந்துள்ளன. இதற்கு முன்பு 12 பறவைகள் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி-துபாய் எல்லைப்பகுதி அருகே உள்ள அல் மஹா பைவோர் விவசாய பண்ணை அருகே இப்பறவைகள் நடமாடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரியவகை பறவை இனத்தை பாதுகாக்க அபுதாபி முஹம்மது பின் ஜாயித் உயிரின பாதுகாப்பு நிதியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

