Monday, March 2, 2026
IPL

IPL 2021: ராஜஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி !

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் 16வது போட்டியில் பெங்களூரு-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இறுதியில் பெங்களூரு அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், அந்த அணியின் ஷிவம் டுபே, ராகுல் திவேட்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்புகளை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷிவம் டுபே 46(32), ராகுல் திவேட்டியா 40(23) மற்றும் ரியான் பராக் 25(16) ரன்கள் எடுத்தனர். அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் 18 பந்துகளில் 21 ரன்களை அடித்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 178 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை முடித்து வைத்தனர். விராட் கோலி 47 பந்துகளில் 72 ரன்களையும், படிக்கல் 52 பந்துகளில் 101 ரன்களையும் எடுத்து அணியை எளிதாக வெற்றிபெற செய்தனர்.

இறுதியில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.