ஷார்ஜா மாநகராட்சியின் அறிவிப்பு: குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் தங்கியிருக்கும் 6,000-க்கும் மேற்பட்ட பேச்சுலர்ஸ் வெளியேற்றம் !
அமீரகத்தின் உச்சநீதிமன்ற உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மதிப்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களின் உத்தரவினைத் தொடர்ந்து ஷார்ஜா காவல்துறை மற்றும் ஷார்ஜா மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றும் ஷார்ஜா மாநகராட்சி, ஷார்ஜா பகுதி முழுவதும் மொத்தம் 1,636 சோதனைகளை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகளின் முடிவில் குடும்பம் மட்டுமே வசிக்கக்கூடிய பகுதிகளில் இருந்து 6,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஷார்ஜா மாநகராட்சி (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.
மேலும், ஷார்ஜா மாநகராட்சியின் இயக்குநர் ஜெனரல் தபிட் அல் துரைஃபி அவர்கள் கூறும்போது, குறைந்தது 6,561 பேச்சுலர்ஸ் குடும்பங்கள் மட்டுமே வசிக்கக்கூடிய பகுதிகளில் வசித்து வந்துள்ளனர். விதிகளை மீறி தங்கி வந்த அவர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றும் ஷார்ஜா மாநகராட்சி சமூக ஊடக பக்கத்தில், நகராட்சியின் சமீபத்திய ஆய்வுகளின் போது அங்கீகரிக்கப்படாத பார்ட்டிஷன்ஸ் (unauthorized partitions) மற்றும் சட்டவிரோத மின் இணைப்புகளை கண்டுபிடித்ததாகவும் அந்த வீடுகளின் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் பல மீறல்கள் இந்த சோதனையின் மூலம் கண்டறியப்பட்டதாக அல் துரைஃபி அவர்கள் கூறியுள்ளார். “சிலர் தங்கள் வீடுகளில் கார் பழுதுபார்க்கும் கடைகள் மற்றும் உணவுக் கடைகளை அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஏராளமான மின் பொருட்களும் (electrical materials) சீரற்ற முறையில் சேமிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

