272 விசிட் விசாவில் வந்திருக்கும் பாகிஸ்தான் மற்றும் இந்தியர்கள் 48 மணி நேரம் துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு !
துபாய் விமான நிலைய நுழைவு விதிமுறைகளை பின்பற்ற தவறிய, விசிட் விசாவில் உள்ள 206 பாகிஸ்தானியர்கள் மற்றும் 66 இந்தியர்கள் 48 மணி நேரத்திற்கு மேல் துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
கடந்த வாரத்தில் இந்தியாவிலிருந்து விசிட்டிங் விசாவில் துபாய் வந்தடைந்த பயணிகள் ஹோட்டல் முன்பதிவு மற்றும் கையில் 2000 திர்ஹம்ஸ் இல்லாமல் இருந்ததன் காரணத்தால் துபாய்க்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், கோ ஏர் விமானம் மூலமாக டெல்லியில் இருந்து துபாய் வந்தடைந்த இரு பெண்கள் உள்ளிட்ட 59 இந்தியர்களுக்கு துபாய்க்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் 48 மணி நேரமாக இவர்கள் விமான நிலையத்தில் தவித்துவருகிறார்கள். இதில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வழியாக துபாய் வந்தடைந்த 6 பயணிகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் பத்திரிக்கை செய்தி மற்றும் கலாச்சாரத்துறை அதிகாரியான நீரஜ் அகர்வால், எங்களுக்கு இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர். அங்குள்ள பயணிகளிடம் ரிட்டர்ன் டிக்கெட் மற்றும் போதுமான பணம் இருக்கிறதா என்பதனை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அதிகாரிகளால் பூர்த்தி செய்யப்பட்டது.
மேலும், துணைத் தூதரகம் மூலமாக இந்த விஷயம் அமீரக குடியேற்றத்துறை மூத்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. அதேபோல, அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும் இது குறித்து அமீரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்றார்.
மேலும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 1,225 பயணிகளுக்கும் துபாய்க்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.