அமீரக பணியாளர்கள் கவனத்திற்கு: 30 சதவீத நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய திட்டம் !
அமீரகத்தில் இயங்கிவரும் நிறுவனங்களில் 20 சதவீத வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை முடக்கியுள்ளதாகவும், மேலும் 30 சதவீத வணிக நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கன்சல்டண்சி மெர்சர் நடத்திய ஆண்டு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 சதவீத நிறுவனங்கள் கொரோனாவினால் விதிக்கப்பட்ட வேலைநிறுத்தத்திற்குப் பிறகு இந்த ஆண்டில் பெரும்பாலும் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் சம்பள உயர்வுகளை வழங்க தாமதப்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்றுநோயை சமாளிக்க அமீரகத்தில் இருக்கும் வணிக நடவடிக்கைகள் குறித்த கணக்கெடுப்பில் இந்த முடிவு தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் செயல்முறையை மேற்கொண்டுவிட்டது என்றும், அதே நேரத்தில் ஊழியர்களின் சம்பளமும் 30-50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இன்னும் அறிவிப்பு வரும் வரை சம்பளம் பெறாமல் இருக்கிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனையில் தாக்கம்:
மேலும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிடும் 30 சதவீத நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் சராசரியாக 10 சதவீதம் குறைப்பை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் சில்லறை விற்பனையில் மிகப்பெரிய தாக்கம் உணரப்படும் என்றும், சில்லறை விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பது போல் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விற்பனை ஏதும் நடைபெறாவிட்டால், தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என எதிர்பாக்கப்படுவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அமீரகத்தில் இருக்கும் 500 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் படி இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.