பயணிகளுக்கு ஓர் நற்செய்தி ! துபாயில் புதிதாக 50 மெட்ரோ ரயில்கள் அறிமுகம் !
துபாயில் மெட்ரோ பயணிகளுக்கென துபாய் மெட்ரோவில் 50 புத்தம் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் போக்குவரத்துத் தலைவர் இன்று நவம்பர் 11, சனிக்கிழமை அறிவித்துள்ளார். இதில் 15 ரயில்கள் எக்ஸ்போ-2020 க்காகவும், மீதமுள்ள 35 ரயில்கள் இப்போதுள்ள துபாய் மெட்ரோ சேவையை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் டைரக்டர் ஜெனரல் மத்தார் முஹம்மது அல் தாயர் அவர்கள் அறிவிப்பில், ‘மெட்ரோ ரயில்களின் உட்புறங்களில் இன்னும் விசாலமானதாக மாற்றுவதற்காக ‘விரிவான மேம்பாடுகள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன’ என்றும் அறிவித்துள்ளார்.

இந்த புதிய வடிவமைப்பில் மூலம் இருக்கைகள் மறுபகிர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு ரயிலின் திறனையும் 8 சதவீதம் அதிகரித்து, மொத்தம் 643 பயணிகள் முதல் 696 பயணிகள் வரை பயணம் செய்வதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அல் தாயர் தெரிவித்தார்.
அதே போல் ரயிலில் நிற்கும் பயணிகளுக்கான இடத்தை விரிவுபடுத்துவதற்காக லக்கேஜ் பெட்டியின் வடிவமைப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் அதிகமாக “பிற புதிய மேம்பாடுகளில் புதிய டிசைன்களில் கிராப் ஹேண்டில்கள் மற்றும் லைட்டிங் (Grab Handles and Lighting) மற்றும் புதிய டிஜிட்டல் விளம்பர காட்சிகளின் பயன்பாடு ஆகியவை அடங்கும். மெட்ரோ பாதை மற்றும் நிலையங்களைக் குறிக்க ஒரு ஒளிரும் டைனமிக் லைன் வரைபடம் (Illuminated Dynamic Line Map) பயன்படுத்தப்படும், மேலும் விளக்குகள் LED மின் சேமிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

புதிய ரயில்கள் ஜபல் அலி மற்றும் அல் ரஷீதியா ஆகிய துபாய் மெட்ரோ டிப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், RTA தற்போது துபாய் மெட்ரோ ரெட் லைன் பாதை 2020 இல் ரயில்களின் செயல்பாட்டுச் சோதனைகளை நடத்தி வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

