அபுதாபி: பேருந்தில் மற்றவருக்கு அருகில் அமர்ந்தால் 3000 திர்ஹம்ஸ் அபராதம் !
அபுதாபி: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்ச்சியில் அமீரக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொது பேருந்துகளில் இரு பயணிகளுக்கு இடையே ஒரு இடைவெளி இருக்கும் வகையில் நடுவில் உள்ள இருக்கைக்கு சிவப்பு நிறத்திலான சீட் கவர் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த இருக்கையில் அமர்ந்தால் அவர்களுக்கு 3000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த சீட் கவரில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஒவ்வொரு பயண முடிவிலும் பேருந்து சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மேலும், பயணிகள் அடிக்கடி தொடும் இடங்களான கைப்பிடிகள் மற்றும் டிக்கெட் வழங்கும் இயந்திரம் போன்றவையும் கவனமாக சுத்திகரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் பேருந்து பணிமனைக்குத் திரும்பியவுடன் முழுவதுமாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளது.
அனைத்துப் பயணிகளும் எப்பொழுதும் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து கொரோனா அச்சுறுத்தலில் இருந்து சமூகத்தைக் காக்கும் பொறுப்பு நம்மிடம் இருப்பதை அவர்கள் உணர்ந்து செயல்படவேண்டும் என்றும் ITC குறிப்பிட்டுள்ளது.
மேலும், அபுதாபி காவல்துறை பிற துறைகளுடன் இணைந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மேற்கொண்டுவருவதாக ITC தெரிவித்திருக்கிறது.

