Monday, March 2, 2026
World

கொரோனா பரவலை தடுக்க கத்தாரில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு !

கத்தார் நாட்டில் சமீப காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசு மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றிற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன. மேலும் நீச்சல் குளங்கள், மற்றும் பூங்காக்கள் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து அதை தடுக்கும் முயற்சியில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் சமீபத்திய வளைகுடா நாடாக கத்தார் திகழ்கிறது.

கத்தாரில் சந்தைகள் 50 சதவிகித திறனில் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் திருமணங்கள் தங்கள் இல்லங்களை தவிர்த்து வெளிப்புற இடங்களில் நடைபெறுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இல்லத் திருமணங்களுக்கு உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் கூடுவதற்கு 15 நபர்கள் வரை மட்டுமே அனுமதி என்றும் இல்ல நிகழ்ச்சிகளில் 5 நபர்கர்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் தனிப்பட்ட சொந்த படகுகளுக்கு 15 நபர்கள் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் தொற்றுநோயின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் இந்நோய்த்தொற்றின் புதிய அதிகரிப்பு “கொரோனாவின் இரண்டாவது அலையின் ஆரம்ப அறிகுறிகளாக தோன்றுகின்றது” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது.