Monday, March 2, 2026
National

கொரோனா அச்சத்தால் திரையரங்குகள், ஜிம் மற்றும் மால்களில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைப் பாதியாக குறைத்த ஷார்ஜா அரசு !

ஷார்ஜா பொருளாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய விதிமுறைகளின்படி, ஷார்ஜாவில் உள்ள ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் மால்களுக்கு அங்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அவர்களின் மொத்த திறனில் அதிகபட்சமாக 60 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.

அமீரகத்தில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடுத்து, பார்வையாளர்கள் தங்களுக்கிடையில் இரண்டு மீட்டர் இடைவெளி தூரத்தை பேண வேண்டும் என்று ஷார்ஜா பொருளாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், சினிமா திரையரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள், ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களைப் பொறுத்தவரை, அனுமதிக்கப்பட்ட திறன் மொத்தத்தில் இருந்து 50 சதவீதம் மட்டுமே என்று சமூக ஊடக சேனல்களில் அறிவித்துள்ளது.

உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் இரண்டு மேஜைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தூரம் இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் என்றும், ஒரே குடும்ப நபர்கள் இல்லாமல் இருக்கும் நிலையில் ஒரே மேஜையில் உட்கார அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை நான்கு மட்டுமே என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய் பரவுவதைத் தடுக்க முகமூடி அணிவது மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மேலும் கூறியுள்ளது.