துபாயில் உள்ள காவல் நிலையங்களுக்குள் நுழைய PCR பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்.. கொரோனா முழுத் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு விலக்கு !!
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிரிகரித்து வரும் நிலையில் பல்வேறு அரசுத் துறைகளுக்கும் தனியார் துறைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 13 சனிக்கிழமை முதல், கொரோனாவிற்கான முழு தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் மட்டுமே துபாயில் உள்ள காவல் நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் PCR நெகடிவ் சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் மேலும் அது 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்டதாக இருத்தல் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் போலீஸ் ஸ்மார்ட் ஆப் (Dubai Police smart app), அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (official website), (901) கால் சென்டர் மற்றும் 24/7 செயல்படும் ஸ்மார்ட் போலீஸ் நிலையங்கள் (Smart Police Stations – S.P.S) உள்ளிட்ட ஸ்மார்ட் சேனல்கள் மூலம் எளிதில் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்று துபாய் போலீஸ் ஆணையம் பொது மக்களுக்கு நினைவூட்டியதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று கடந்த புதன்கிழமை ஷார்ஜா காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் அதன் தலைமையகம் மற்றும் வளாகங்களுக்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களும் கோவிட் நெகடிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசிக்கான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

