இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ரோகித் சர்மா 161, ரஹானே 67, ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் தமிழக வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்நிலையில் 195 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. அஸ்வின் 106, விராட் கோலி 62 ரன்கள் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய 4-ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் ஸ்பின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி 54.2 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

