Monday, March 2, 2026
National

துபாய் விமான நிலையத்தில் இனி பயண ஆவணங்களின்றி பயணிக்கலாம்…புதிய ‘ஸ்மார்ட் டிராவல்’ (Smart Travel) சேவை அறிமுகம் !!

துபாய் விமான நிலையம் பயணிகளுக்கான புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் இறுதி சோதனைக் கட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், துபாய் விமான நிலையம் ‘ஸ்மார்ட் டிராவல்’ (Smart Travel) முறையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது பயணிகள் தங்கள் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தாமல் பயணிக்க உதவுகிறது.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) ஒருங்கிணைந்த பயோமெட்ரிக் மற்றும் தொடர்பில்லா பயண பாதை (Integrated Biometric Contactless Pathway) சேவையை கடந்த 2019 ஆம் ஆண்டு GITEX இல் முதன்முதலில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிப்ரவரி 22 திங்கட்கிழமை GDRFA உயர் அதிகாரிகளால் இச்சேவை முறையாக வெளியிடப்பட்டது.

சமீபத்திய பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முக மற்றும் கருவிழி அங்கீகாரத்தின் மூலம் (a mix of facial and iris recognition) பயணிகள் இப்போது தங்கள் விமான பயணத்தை செக்-இன் (Check-in) செய்து கொள்ளலாம், முழுமையான குடியேற்ற நடைமுறையைகளை (Complete Immigration Formalities) நிறைவு செய்யலாம், லவுஞ்ச் வசதிகளுக்குள் (Lounge Facilities) நுழையலாம் மற்றும் விமான நிலையத்தில் சுலபமாக உலாவுவதன் மூலம் தங்கள் விமானங்களில் ஏறும் வரை அனைத்து சேவைகளும் எளிதாக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் முதல் மற்றும் வணிக வகுப்பு (First and Business Class) செக்-இன் கவுண்டர்களில் மொத்தம் இதுபோன்ற எட்டு பதிவு முனையங்கள் (Registration Terminals) அமைக்கப்பட்டுள்ளன. முதல் மற்றும் வணிக வகுப்பு பயணிகள் புறப்படும் முனையத்தில் Immigration கவுண்டர்களுக்கு அருகில் ஸ்மார்ட் சுரங்கப்பாதை (Smart Tunnel) அமைக்கப்பட்டுள்ளது.

துபாய் GDRFA வில் உள்ள துறைமுக விவகாரங்களின் உதவி பொது இயக்குநர் ப்ரகதீர் தலால் அஹ்மத் அல் ஷாங்கெட்டி (Brigadier Talal Ahmad Al Shanqeti) கூறுகையில், துபாய் விமான நிலையங்களின் புறப்பாடு மற்றும் வருகை அரங்குகளில் 122 ஸ்மார்ட் வாயில்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன, எனவே முன்பே பதிவுசெய்துள்ள பயணிகள் பயண ஆவணங்களின் தேவையின்றி இந்த அமைப்பை பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு அனுமதிக்குப் பிறகு, பயணிகள் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லவுஞ்ச் பகுதிக்குள் நுழைந்து இறுதியாக தங்கள் விமானத்திலும் நுழையலாம். மேலும், அல் ஷாங்கெட்டி கூறுகையில், “பயணிகள் ஸ்மார்ட் கேட்ஸ் அல்லது புதிய ஸ்மார்ட் டன்னல் அமைப்பை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடியைப் பயன்படுத்தி அல்லது வாயில்களில் தங்கள் முகத்தைக் காட்டி நுழையலாம்” என்று கூறினார்.

“17 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும் பயோமெட்ரிக் பாதைகளை (Smart Tunnel) பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் குறைந்தது 3,000 பயணிகள் பயோமெட்ரிக் வாயில்களைப் பயன்படுத்தலாம். தடையற்ற பயணத்திற்காகவே ஸ்மார்ட் வாயில்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.