Monday, March 2, 2026
National

அபுதாபியில் அல் குரம் (Al Qurum) கடற்கரை பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு !

அபுதாபியில் உள்ள அல் குரம் கடற்கரை (Al Qurum Beach) பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி மாநகராட்சி கூறுகையில், “அபுதாபியில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஷேக் ஜாயித் சாலை அருகில் மாங்குரோவ் கடற்பகுதியை ஒட்டி புதிதாக அல் குரம் கடற்கரை பகுதி கடந்த 2 ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த புதிய கடற்கரை பகுதி தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் 3.5 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், யோகா செய்யக்கூடிய வசதியும், சைக்கிள் ஓட்டும் வகையிலும் இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது”.

டால்பின் பூங்கா:

“குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக டால்பின் பூங்காவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து உணவருந்தும் வகையில் பெரிய இடமும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது”.

இந்நிலையில், இந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பொழுதை கழிக்க உதவும் சிறந்த இடமாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.