Saturday, October 18, 2025
National

புதிய கட்டமைப்பு மாற்றங்கள் (Structural Changes) மற்றும் சிறந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த துபாய் அரசாங்கம் !

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், துபாய் அரசாங்கத்தில் ஒரு புதிய வளர்ச்சிக்கான கட்டமைப்பு மாற்றங்களுக்கு (Structural Changes in Dubai Government) ஒப்புதல் அளித்தார்.

புதிய அரசாங்கம் மிகவும் நெகிழ்வானதாகவும், திறமையாகவும், புதிய மாற்றங்களைச் சமாளிக்கக்கூடியதாகவும் இருக்கும் வகையில் கட்டமைப்பு செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “முன்னேறாதவர்கள் பின்வாங்குகிறார்கள், கடந்தகால சாதனைகளை நம்பியிருப்பவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழக்க நேரிடும். ஆனால் துபாய் எதிர்காலத்தை நோக்கி உள்ளது, மேலும் பிராந்தியத்தின் துடிப்பான உலகளாவிய முக்கிய பொருளாதார நாடாக விளங்குவதே அதன் நோக்கமாக உள்ளது. தீர்மானங்கள் அதிகமாக இருந்தால் அடுத்தகட்ட செயல்பாடுகள் மிகவும் அழகாக இருக்கும்” என்று ஷேக் முகமது கூறினார்.

துபாய் செயற்குழுவின் கூட்டத்தின் போது, துபாய் மகுட இளவரசர் மற்றும் செயற்குழுத் தலைவர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துபாயின் துணை ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் முன்னிலையில் ​​துபாய் அரசின் தீர்மானங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களுக்கு ஷேக் முகமது ஒப்புதல் அளித்தார்,

மேலும், அமீரகத்தின் வர்த்தக பரிமாற்றத்தை Dh1.4 டிரில்லியனிலிருந்து Dh2 டிரில்லியனாக உயர்த்துவதற்கான ஐந்தாண்டு திட்டத்திற்கும் ஷேக் முகமது ஒப்புதல் அளித்தார்.

தற்போது உலகெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கப்பல் மற்றும் விமான வழித்தடங்களை உள்ளடக்கிய துபாயின் புதிய சர்வதேச வர்த்தக பாதை வரைபடத்திற்கு அவர் ஒப்புதல் அளித்தார். “சர்வதேச வர்த்தகத்தில் அமீரகம் இன்னும் சிறப்பாக செயல்பட எங்கள் வலையமைப்பை மேலும் 200 நகரங்களுடன் விரிவுபடுத்த வேண்டும். உலகின் முக்கிய விமான நிலையம் மற்றும் துறைமுகமாக அமீரகம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று ஷேக் முகமது கூறினார்.