உம்-அல்-குவைன்: ரமலானில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா புதிய விதிமுறைகளை வெளியிட்ட அமைச்சகம் !
உம் அல் குவைனில் உள்ள அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ரமலானில் கடைபிடிக்க வேண்டிய புதிய பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது.
இப்புதிய வழிகாட்டுதல்களின் படி, உறவினர்களை அவர்களின் இல்லங்களில் சந்தித்தல் மற்றும் குடும்பங்கள் ஒன்று கூடுதல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக ஆன்லைனில் குடும்பங்கள் ஒன்றுகூடி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், தங்களுக்கிடையில் உணவை பரிமாறிக்கொள்ளவோ விநியோகிக்கவோ கூடாது என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்பங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இப்தார் கூடாரங்களை அமைக்கவும் மற்றும் வீடுகளுக்கு வெளியே உணவு விநியோகிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
உணவகங்களுக்குள் அல்லது அதற்கு வெளியிடங்களில் நோன்பாளிகளுக்கு இப்தார் உணவு விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு தொழிலாளர் வளாகங்களில் உணவு விநியோகம் அனுமதிக்கப்பட்டநிலையில் அவை இறுக்கமாக மூடப்பட்ட பெட்டிகளிலோ அல்லது பைகளிலோ இருக்க வேண்டும்.
பணியிடங்களில் குர்ஆன்கள் மற்றும் பிற பரிசுகளை விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஜகாத் மற்றும் ஏதேனும் நன்கொடைகளை வழங்குவதாக இருந்தால் அவற்றை மின்னணு முறையில் செலுத்துமாறும், பிச்சைக்காரர்களைப் பற்றி புகாரளிக்கவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெண்களின் பிரார்த்தனை அறைகள், சேவை மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள பிரார்த்தனை அறைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
ரமலானின் கடைசி 10 நாட்களில் நடைபெறும் கியாமுல்லைல் வழிகாட்டுதல்கள், இரவு நேர மசூதி பிரார்த்தனைகள் ஆகியவை நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோயின் சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளின் படி முடிவு செய்யப்படும்.
முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தராவிஹ் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் அதிகபட்சமாக 30 நிமிடங்களில் நடத்தப்படும். ஸ்மார்ட் சாதனங்களிலிருந்து மட்டுமே குர்ஆன் ஓதுமாறும் மசூதிகளில் குர்ஆனின் நகல்களை அணுகி ஓதுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட விதிமுறைகளை மீறியர்களைப் பற்றி புகார் அளிக்க 901 அல்லது 06-7062000 என்ற தொலைபேசி எண்ணில் அழைப்பதன் மூலம் அறிக்கை செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

