தைவானில் ரயில் தடம்புரண்டு விபத்து…4 பேர் பலி..20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்..மீட்பு பணிகள் தீவிரம் !
கிழக்கு தைவானில் உள்ள சுரங்கப்பாதையில் வெள்ளிக்கிழமை ரயில் ஒன்று தடம் புரண்டது. விபத்தில் காயமனடைந்தோரை மீட்பதற்கு, விபத்து நடந்த இடத்தை அடைய சிரமம் ஏற்பட்டதால் குறைந்தது நான்கு பேர் இறந்திருக்கலாம் என்றும் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
டைதுங்கிற்கு (Taitung) பயணிக்கும் இந்த ரயில், ஹுவாலியனுக்கு (Hualien) வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென்று ரயில் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டு சுரங்கப்பாதையின் சுவரில் சென்று மோதி விபத்து ஏற்படுத்தியதாக தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் குறைந்தது நான்கு பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது, பலத்த காயங்களுடன் மூன்று பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் 20 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்குச் செல்ல காத்திருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயிலில் சுமார் 350 பேர் வரை பயணம் செய்ததாகவும், மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயிலின் முதல் நான்கு பெட்டிகளிலிருந்து 80 முதல் 100 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ஐந்து முதல் எட்டு பெட்டிகள் வரை விபத்துக்குள்ளானவை என்றும் மீட்பதற்கு கடினம் என்றும் கூறப்படுகிறது.

