அமீரகம்: பரக்கா அணுமின் நிலையம் (Barakah nuclear power plant) வர்த்தக செயல்பாடுகளைத் தொடங்கியது! துபாய் ஆட்சியாளர் பாராட்டு!
அமீரகம் இன்று செவ்வாய்க்கிழமை பரக்கா எனும் அணுமின் நிலையத்தில் (Barakah nuclear power plant) வர்த்தக செயல்பாடுகளைத் தொடங்கி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், “நாட்டுக்கு இன்னொரு வரலாற்று தருணம் இதைவிட வேறு எதுவாக இருக்க முடியும்” என்று மகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் “இன்று அமீரகம் ஒரு வரலாற்று சாதனையை புரிந்துள்ளது, சுமார் 10 ஆண்டுகளின் உழைப்பு, 2,000 பொறியாளர்கள், அமீரகத்தின் இளைஞர்கள், 80 சர்வதேச நாடுகளின் கூட்டுமுயற்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான அமீரக தலைவரின் நற்சிந்தனையே இந்த வெற்றிக்கு காரணம்” என்று கூறினார்.
நாட்டின் மின்சார வலையமைப்பில் நுழைந்த “முதல் அரபு அணுமின் நிலையத்திலிருந்து பெறக்கூடிய முதல் மெகாவாட்” என்று கூறி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
“அமீரக மக்களுக்கு வாழ்த்துக்கள்”, “எனது சகோதரர் முகமது பின் சயீதுக்கும் வாழ்த்துக்கள்” என்று ஷேக் முகமது கூறினார்.
அபுதாபியின் மகுட இளவரசரும்,அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இந்த சாதனைக்கு காரணமான அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், “பரக்கா அணுமின் நிலையத்தில் வணிக நடவடிக்கைகளின் தொடக்கமானது அமீரகத்தின் வரலாற்று மைல்கல்லாகும், இது எங்கள் முழு மின் துறையின் நிலைத்தன்மையை கணிசமாக மேம்படுத்துகிறது. இதை சாத்தியப்படுத்தியவர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அவர்களின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புக்கு நன்றி” என்றார்.

