NationalTechnology

சேவைகளுக்காக இனி அரசு மையங்களுக்குச் செல்லத் தேவையில்லை..முக மற்றும் கைரேகையுடன் கூடிய பயோமெட்ரிக் தொழில்நுட்பம் அறிமுகம் !

அமீரகத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்காக புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் பாதுகாப்பான டிஜிட்டல் தேசிய அடையாள (first secure digital national identity) முறையை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அமீரகம் முக மற்றும் கைரேகை அங்கீகாரத்துடன் கூடிய ஒரு பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய முயற்சியைத் தொடங்குவதற்கான திட்டங்களை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் முதலில் அறிவித்த இரண்டு மாதங்களுக்குள் இது நடைமுறைக்கு வருகிறது.

இத்தொழில்நுட்பம் UAE பாஸ் மற்றும் டிஜிட்டல் அடையாள பயன்பாட்டில் பதிவுசெய்தல் செயல்முறையை எளிதாக்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் சேவைகளுக்காக அரசு மையங்களுக்குச் செல்லத் தேவையில்லை என்று மாநில செய்தி நிறுவனமான வாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட உலகின் முதல் அரசாங்கங்களில் அமீரக அரசும் ஒன்றாகும். மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதும், டிஜிட்டல் முறையில் அரசு சேவைகளைப் பெறுவதற்கான விரைவான மற்றும் பயனுள்ள வழியை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

மேலும், இதுவரை பதிவுசெய்யப்பட்ட டிஜிட்டல் ஐடிகளின் எண்ணிக்கை 1.38 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, அவற்றில் 628,000 கணக்குகள் சரிபார்க்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.