அபுதாபி: ரமலானில் ஷாப்பிங் செய்வதற்கான கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்த அரசு!
புனித ரமலான் மாதத்தில் ஷாப்பிங் செய்வதற்கான கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அபுதாபியில் உள்ள அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
நெரிசலான சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மையங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“மற்றவர்களுடனான நீண்ட நேர தொடர்புகளால் தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது” என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அபுதாபி அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு, சுகாதாரத் துறை – அபுதாபி மற்றும் அபுதாபி பொது சுகாதார மையத்துடன் இணைந்து புனித ரமலான் மாதத்திற்கான பொதுவான தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய வீட்டு பொருட்களை வாங்க மளிகை கடைகள் மற்றும் பிற கடைகளுக்கு வருவதைக் குறைக்க குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“நேரில் ஷாப்பிங் செய்வது அவசியம் எனில் உச்ச நேரங்களைத் (Peak Hours) தவிர்க்கவும். மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன் போன்ற அடிப்படை பொருட்களுக்கு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யவும்” என்று அறிவித்துள்ளது.
“நேரில் ஷாப்பிங் செய்தால், ஷாப்பிங் தள்ளுவண்டிகளின் கைப்பிடிகளை (Handles of Shopping Trolleys) கவனமாக கிருமி நீக்கம் செய்யுங்கள், மேலும் நீங்கள் வாங்காத தயாரிப்புகளைத் தொடாதீர்கள். வீட்டிற்கு வந்த பிறகு வாங்கிய பொருட்களை சுத்தம் செய்ய கிருமிநாசினிகளைப் பயன்படுத்துங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை கவனமாக கழுவுங்கள்” என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கார்டு மூலமாகவோ அல்லது மொபைல் கட்டண பயன்பாடுகள் மூலமாகவோ மின்னணு முறையில் பணம் செலுத்துவதைத் தேர்ந்தெடுப்பதும், லிஃப்ட்ஸுக்குப் பதிலாக எஸ்கலேட்டர்கள் அல்லது படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளவர்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் ஷாப்பிங் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

