இந்தியா: பத்தாம் வகுப்பு CBSE தேர்வுகள் ரத்து..12 ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு…தேர்வு வாரியம் அறிவிப்பு!
இந்தியாவில் சமீபமாக கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் இந்தியாவின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
வாரியத் தேர்வுகள் 2021 மே 4 ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில் தற்போது இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிபிஎஸ்இ அதிகாரிகளையும் கல்வி அமைச்சரையும் சந்தித்த பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ANI-க்கு கூறுகையில், மாணவர்களின் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று கூறினார்.
இந்நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பின்னர் நடைபெறும் என்றும் ஜூன் 1 அன்று “மதிப்பாய்வு” செய்யப்பட்டு “விவரங்கள் பின்னர் பகிரப்படும்” என்றும் அறிவித்தார்.
தேர்வுகள் தொடங்குவதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

