ஷார்ஜா: குடியிருப்பாளர்களின் மின் கட்டண காலங்களை நீட்டித்து SEWGA அறிவிப்பு !
ஷார்ஜா மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு ஆணையம் (The Sharjah Electricity, Water and Gas Authority, SEWGA) குடியிருப்பாளர்களின் பயன்பாட்டு பில்களுக்கான (Utility Bills) கட்டண காலங்களை நீட்டித்துள்ளதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.
ஷார்ஜா குடியிருப்பாளர்கள், SEWGA பில்கள் 1,000 திர்ஹம்ஸ் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், பில்லிங் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அபராதம் இன்றி கட்டணம் செலுத்தலாம். பில்கள் 1,000 திர்ஹம்ஸைத் தாண்டியவர்களுக்கு 15 நாள் வரை சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கட்டணம் செலுத்தும் காலம் ஏழு நாட்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியதில்லை என்றும் வாடிக்கையாளர் சேவைத் துறையின் இயக்குனர் ஹமத் தாஹர் அல் ஹஜ் கூறினார்.
கட்டண பில்கள் நான்கு சுழற்சிகள் மூலம் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சுழற்சியும் ஷார்ஜாவில் உள்ள ஒரு பகுதியை உள்ளடக்கியது. புதிய பில் செலுத்தும் முறை பின்வரும் சுழற்சிகளை உள்ளடக்கியது:
- முதல் சுழற்சியின் பில்கள் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் அதே மாதம் 21 ஆம் தேதி வரை அபராதம் இல்லாமல் கட்டணம் செலுத்தலாம்.
- இரண்டாவது சுழற்சியின் பில்கள் ஒவ்வொரு மாதமும் 14 ஆம் தேதி வழங்கப்படுகின்றன. இதில் அடுத்த மாதம் 1 ஆம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம்.
- மூன்றாவது சுழற்சியின் பில்கள் ஒவ்வொரு மாதமும் 21 ஆம் தேதி வழங்கப்படுகின்றன. இதில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம்.
- நான்காவது சுழற்சியின் பில்கள் ஒவ்வொரு மாதமும் 28 ஆம் தேதி வழங்கப்படுகின்றன. இதில் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை அபராதம் இல்லாமல் கட்டணம் செலுத்தலாம்.
வாடிக்கையாளர் சேவைத் துறையின் துணை இயக்குநர் ஹுசைன் அல் அஸ்கர் கூறுகையில், “பில்லிங் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் அபராதம் இல்லாமல் 1,௦௦௦ திர்ஹம்ஸ் அல்லது அதற்கும் குறைவான பில் செலுத்த முடியும் என்று விளக்கினார். அவ்வாறு செய்யத் தவறினால் 25 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். மீதமுள்ள தொகை Dh300 க்கு குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கப்படாது” என்றார்.
அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது ஸ்மார்ட் பயன்பாடு மற்றும் அதன் சேவை அலுவலகங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய சுழற்சி தேதியின் முழு விவரங்களையும் கட்டண விவரங்களையும் சரிபார்க்க முடியும் என்று அவர் விளக்கினார். மேலும், அவர்கள் 991 என்ற எண்ணில் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுக முடியும் என்று தெரிவித்தார்.

