சவூதி அரேபியாவில் உம்ரா செய்ய வெளிநாட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அறிவிப்பு !
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இந்த வருடம் உம்ரா செய்ய வெளிநாட்டு வழிபாட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அரபு பத்திரிகை செய்தியின்படி, உம்ரா செய்வதற்கு குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக மக்காவில் உள்ள ஒரு பராமரிப்பு மையத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி வகைக்கு ஏற்ப வழிபாட்டாளர்கள் தங்கள் தடுப்பூசி நிலையை சரிபார்க்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
பின்னர் வழிபாட்டாளர்கள் அணிய ஒரு கைக்காப்பு வழங்கப்படும் என்றும் அது அவர்களுடன் தொடர்புடைய அனைத்து அனுமதிகளையும் சரிபார்க்க அல்-ஷுபைக்கா சேகரிக்கும் மையத்திற்கு (Al Shubaikha Gathering Centre) அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க சுகாதார அமைச்சகம் நிர்ணயித்த நடைமுறைகளுக்கு ஏற்ப மார்ச் மாதம் முதல் சவூதி அரேபியா வழிபாட்டாளர்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளது.
ஈட்மார்னா மற்றும் தவக்கல்னா பயன்பாடுகளின் (Eatmarna and Tawakkalna Apps) புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளைப் பயன்படுத்தி உம்ரா மற்றும் வருகை-பிரார்த்தனை (Umrah and visit-and-prayer) அனுமதிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

