இந்தியா, பாகிஸ்தானிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை விதித்தது கனடா அரசு !
இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை விதித்து கனடா அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
“இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து அனைத்து வணிக மற்றும் பயணிகள் விமானங்களும் நிறுத்தப்படும். இருப்பினும், சரக்கு விமானங்களின் சேவை தொடரும்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அந்நாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்த கவலைகளை சமாளிக்கவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தொற்றுநோயியல் நிலைமை குறித்து ஆய்வு செய்த பின்னர் இந்த 30 நாள் காலம் முடிவு செய்யப்பட்டது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து கனடாவுக்கு வரும் பயணிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொரோனவிற்கான ப்ரீ போர்டிங் சோதனைகள் (Pre-Boarding Tests), வருகையின் சோதனைகள் (Test on Arrivals) மற்றும் அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

