Monday, March 2, 2026
National

இந்தியாவிலிருந்து அமீரகம் வரும் அனைத்து விமானங்களும் 10 நாட்களுக்குத் தடை! அமீரக சிவில் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு!

இந்தியாவில் தினந்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாளை (24.04.2021) நள்ளிரவு முதல் இந்தியாவிலிருந்து அனைத்து விமான சேவைகளும் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அமீரக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூட்டாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமீரக சிவில் போக்குவரத்து ஆணையம், நாளை நள்ளிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவிலிருந்து அமீரகத்துக்கு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்தியா வழியாக பிற நாடுகளிலிருந்து பயணம் மேற்கொண்டாலும் அமீரகம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அமீரக குடியுரிமை பெற்றவர்கள், தூதரக பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் மற்றும் அரசுமுறை பயணமாக வருபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சரக்கு விமானங்கள் வழக்கம் போல் செயல்படும். 24-ந்தேதிக்கு பிறகு இந்தியாவிற்கு பயணம் செய்ய விமான டிக்கெட் எடுப்பதற்கு சில விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. அறிவிக்கப்பட்ட 10 நாட்கள் விமான சேவைத் தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.