சவுதிஅரேபியா: நாளை முதல் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பம்
சவூதி அரேபியாவில் கொரோனா தொற்றால்\ கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்திருந்த நிலையில், தற்பொழுது அத்தடையை சிறிதளவு தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. GCC நாட்டு குடிமக்கள் மற்றும் செல்லுபடியாகும் விசாவை வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் நாளை (செப்டம்பர் 15) முதல் சவூதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செல்லுபடியாகும் Exit and Re-Entry விசா, Work visa (பணி விசா) , Residents Permit (இகாமா) மற்றும் Visit Visa (விசிட் விசா)க்கள் ஆகியவற்றைக் கொண்ட வெளிநாட்டவர்கள், சவூதிக்கு நுழைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட கொரோனா வைரஸ் எதிர்மறை சோதனை (Negative Corona Certificate) முடிவுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 2021 க்குப் பிறகு தரை, கடல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கிக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடைகள் நீக்கப்படும் குறிப்பிட்ட தேதி குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து திறமையான அதிகாரிகள் முன்வைத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் தாக்கத்தினால் உம்ரா மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையும் கூடிய விரைவில் படிப்படியாக நீக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.