அபுதாபி: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! குழந்தைகளை வாகனத்தின் முன் இருக்கையில் அமர வைத்தால் 5,400 திர்ஹம்ஸ் அபராதம் !!
அபுதாபி காவல்துறை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வாகனத்தின் முன் இருக்கையில் அமர வைக்கக்கூடாது என்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட வாகனம் உடனடியாக தண்டிக்கப்படும் என்றும், வாகனத்தின் உரிமையாளர்கள் அதை விடுவிக்க 5,௦௦௦ திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றத்திற்காக 400 திர்ஹம்ஸ் அபராதமும் சேர்த்து மொத்தம் 5400 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும்.
“உரிமையாளர் அபராத கட்டணம் செலுத்தும் வரை வாகனத்தை மீட்க முடியாது என்றும், உரிமையாளரால் வாகனத்திற்கான உரிமை கோரப்படாவிட்டால் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குப் பிறகு வாகனம் ஏலம் விடப்படும்” என்றும் சமூக ஊடக செய்தியில் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அபுதாபியில் இயற்றப்பட்ட புதிய போக்குவரத்து சட்டங்களின் ஒரு பகுதியாக இந்நடைமுறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வாகனங்களின் பின் இருக்கைகளில் அமர்ந்து சீட் பெல்ட் அணிய வேண்டும். நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை குழந்தை இருக்கைகளில் (Child Seats) அமர வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.