அபுதாபி: கொரோனா PCR பரிசோதனைக்கான கட்டணம் Dh65 ஆக குறைப்பு…சுகாதாரத் துறை தகவல் !
அபுதாபியில் கொரோனா PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டணம் Dh65 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அபுதாபி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இன்றுவரை, இப்பரிசோதனை (Nasal Swab Test) செய்வதற்கான கட்டணம் Dh85 ஆகும். இந்நிலையில், மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனை உட்பட கொரோனா PCR பரிசோதனைக்கான கட்டணம் ஒரு முறைக்கு Dh65 என மாற்றப்பட்டுள்ளது என்று சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
PCR பரிசோதனைகள் தலைநகரில் உள்ள பல பொது மற்றும் தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் நடத்தப்படுகின்றன. மேலும், அபுதாபி முழுவதும் பல டிரைவ்-த்ரூ ஸ்கிரீனிங் மையங்களும் உள்ளன.
மேலும், இப்புதிய கட்டணம் பொருந்தும் வகையில், அமீரகம் முழுவதும் ஐந்து துறைகளில் உள்ள ஊழியர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு முறை கொரோனா PCR பரிசோதனை செய்ய வேண்டும். ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் சுகாதாரம், சமூக மற்றும் தனிப்பட்ட சேவைத் தொழில்களான சலவையகம், சலூன் மற்றும் அழகுநிலையம் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை மார்ச் 28 முதல் அமலுக்கு வருகிறது.

