அபுதாபியில் மீண்டும் பரவும் கொரோனா !! சினிமா திரையரங்குகள், ஜிம்கள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு !!
அமீரகத்தில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் சினிமா அரங்குகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் புதிய கட்டுப்பாடுகளை அபுதாபி அரசு விதித்துள்ளது.
அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மாலின் மேலாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில், “எங்களுக்கு உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து ஒரு சுற்றறிக்கை கிடைத்துள்ளது. ஷாப்பிங் மால்களில் மொத்த கொள்ளளவு 40 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் 60 சதவீதத்திலும், விளையாட்டு அரங்குகள் 50 சதவீதத்திலும் செயல்படலாம். நாங்கள் விளையாட்டு அரங்குகள் என கூறியிருப்பதை உடற்பயற்சி கூடமாக எடுத்துக்கொள்கிறோம், எனவே அதற்கேற்ப நாங்கள் அவர்களுக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளோம்” என்று கூறினார்.
அபுதாபியில் சினி ராயல் மற்றும் வோக்ஸ் சினிமாஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் சினிமா அரங்குகள் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மூடப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளன. இதனை “மீண்டும் அறிவிக்கும் வரை நாங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறோம்” என்று சினி ராயல் நிர்வாக மேலாளரும், “அபுதாபி மற்றும் அல் அய்ன் ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளை தற்காலிகமாக அரசாங்கம் மூடுவதற்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம்” என்று வோக்ஸ் சினிமாஸ் தனது சமூக ஊடக பக்கங்களிலும் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் ஜனவரி மாதத்திற்கு முன்பு வரையிலும் குறைவான எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது தினசரி 3,000 க்கும் அதிகாகமாவே பதிவாகி வருகின்றது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அமீரகத்தில் மீண்டும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.