Friday, October 17, 2025
NationalTravel

துபாயிலிருந்து இந்தியா செல்லும் விமானங்களின் கட்டணம் அதிரடி குறைப்பு !

துபாயிலிருந்து இந்தியா செல்லும் விமானங்களின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக டிராவல் ஏஜென்சிக்கள் அறிவித்திருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு துபாயிலிருந்து மும்பை, கொச்சின் அல்லது பெங்களூரு செல்லும் விமானங்களில் 1,300 -1,500 திர்ஹம்ஸ் விமான கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
ஆனால், இப்பொழுது 300 – 500 திர்ஹம்ஸ் மட்டுமே வசூலிக்கப்படுவதாக டிராவல் ஏஜென்சிக்கள் அறிவித்திருக்கின்றன.

இதுகுறித்துப் பேசிய ஷாம்ஸ் அபுதாபி டிராவல் ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர், இந்தியாவிற்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக்காரணம் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும் விமானங்களே ஆகும். இந்த மாதத்தில் மட்டும் இந்திய அரசு 270 விமானங்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கிவருகிறது என்றார்.

அதே நேரத்தில், துபாயிலிருந்து தங்களது மாநிலத்திற்கு வரும் பயணிகள் பின்பற்றவேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகளும் பெருமளவில் தளர்த்தியுள்ளன. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்கள் பயணிகளின் வருகையின்போது PCR பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்கவேண்டும் என நிர்பந்திப்பதில்லை.

டிக்கெட் விலை குறைந்திருப்பினும் பயணிகள் இந்தியா செல்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என ஏஜென்ட்கள் குறிப்பிடுகிறார்கள்.

துபாய் – இந்தியா இடையே பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதே இதற்கு மிக முக்கியக் காரணம். இந்தியாவில் பெருகிவரும் கொரோனா தொற்றின் வேகம் தான் என ஸ்ட்ரேடிஜிக்ஏரோ (StrategicAero) ஆய்வு அமைப்பின் தலைமை ஆய்வாளர் சஜ் அகமது தெரிவித்துள்ளார்.