இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு பயண தடை விதித்து இஸ்ரேல் அறிவிப்பு!
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நாடுகளில் ஒன்றான இந்தியா உள்பட ஏழு நாடுகளுக்கு இஸ்ரேல் பயண தடையை அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல், கொரோனா நோய்த்தொற்றிலிருந்து சமீபமாக மீண்டு வந்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் பலனாக அங்கு தொற்று பாதிப்பு நாளடைவில் குறைந்து வருகிறது.
குறிப்பாக, தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 100-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இருப்பினும், நோய்த்தொற்று அதிகரிக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நாள்தோறும் அதிகரித்து வரும் நாடான இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு இஸ்ரேல் பயண தடை விதித்துள்ளது. இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா, உக்ரைன், எத்தியோப்பியா, மெக்ஸிகோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இதில் அடங்கும்.
மேற்கூறிய இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கும், அந்நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இஸ்ரேல் வருவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இப்பயணத்தடை நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் அடுத்த 13 நாட்களுக்கு இது அமலில் இருக்கும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

