ரமலான் மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்ட அமைச்சகம் !
புனித ரமலான் மாதம் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளனர். வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் எந்தவொரு கூட்டத்தையும் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.
தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) செய்தித் தொடர்பாளர் டாக்டர் சீஃப் அல் தஹேரி அவர்கள் இதற்கான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளார்.
- இப்தார் நிகழ்ச்சியின்போது குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் கூட்டத்தைத் தவிர்த்தல்.
- அண்டைவீட்டார் மற்றும் குடும்பங்களுக்கிடையில் உணவு விநியோகம் செய்வதைத் தவிர்த்தல்.
- ஒரேவீட்டில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உணவை பகிர்ந்து கொள்ளல்.
- குடும்பங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இப்தார் கூடாரங்கள் அமைக்க தடை.
- மசூதிகளுக்கு உள்ளே இப்தார் உணவருந்தத் தடை.
- உணவகங்களுக்குள் அல்லது அதற்கு வெளியிடங்களில் இப்தார் உணவு விநியோகிக்க தடை.
- நிர்வாகத்தின் நேரடி ஒருங்கிணைப்பு மூலம் இப்தார் உணவு விநியோகிக்க தொழிலாளர் குடியிருப்பு வளாகங்களில் மட்டும் அனுமதி.
புனித மாதத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகள் நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் குறுகிய கால நேரத்திற்குள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உலகளாவிய மற்றும் உள்ளூர் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் மாற்றத்திற்கு உட்பட்டவை என்றும் கூறப்பட்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எந்தவிதமான கூட்டங்களையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். புனித மாதத்தில் தீவிர ஆய்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், மீறுபவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.