அமீரகத்தில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…சுகாதார அமைச்சகம் அறிவிப்பு !
அமீரகத்தில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வயதானவர்கள் மற்றும் பிற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு ஆறு வாரங்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் இந்நடைமுறை செயல்படுத்தப்படும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.
மார்ச் 21, ஞாயிற்றுக்கிழமை முதல், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து தகுதியுள்ள குடியிருப்பாளர்களும் தடுப்பூசியைப் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இத்தடுப்பூசி நாட்டின் 205 க்கும் மேற்பட்ட சுகாதார மையங்களில் இலவசமாக கிடைக்கும். இருப்பினும், தடுப்பூசியைப் பெற முன்பதிவு கட்டாயமாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு வாரங்களில், மூத்த குடிமக்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளவர்களில் 72 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, 56 சதவீதத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
அமீரகத்தில் சினோபார்ம், ஃபைசர், ஸ்பூட்னிக் வி மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய நான்கு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மார்ச் 20 ஆம் தேதி நிலவரப்படி, அமீரகம் 100 பேருக்கு 72.61 விநியோக விகிதத்தில் இதுவரை 7.18 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

