IPL 2020: கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி !
துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2020 ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை எளிதாக்க முடியும் என்ற நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆடியது. சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் ஆடியது
இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை பரபரப்பு நீடித்தது. ஜடேஜா மட்டும் இல்லையென்றால் சிஎஸ்கே அணி இந்தப் போட்டியை வெல்ல வாய்ப்பே இல்லை. கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை போட்டி சென்றது. ஜடேஜா கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து சிஎஸ்கே அணியை ஜெயிக்க வைத்தார்.
கடைசி இரு ஓவர்களில் 30 ரன்கள் தேவை எனும் நிலையில் ஜடேஜா மட்டுமே அதில் 26 ரன்களை எடுத்தார். கொல்கத்தா அணி இந்த தோல்வியால் பிளே-ஆஃப் வாய்ப்பை சிக்கலாக மாற்றிக் கொண்டது. சிஎஸ்கே அணி இந்த ஆறுதல் வெற்றியால் குஷியானது.
டாஸ் வெற்றி:
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி டாஸ் வென்றார். கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணிக்கு ஷுப்மன் கில் – நிதிஷ் ராணா துவக்கம் அளித்தனர்
கொல்கத்தா பேட்டிங்:
கில் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். ராணா ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதிஷ் ராணா 61 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவர் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாக ஆடிய பேட்ஸ்மேன்கள்.
கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.
சிஎஸ்கே பேட்டிங்:
வாட்சன் 19 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து சிஎஸ்கே அணியை மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த ராயுடு அதிரடி ஆட்டம் ஆடினார். 20 பந்துகளில் 38 ரன்கள் குவித்து ரன் ரேட்டை ஏற்றினார். துவக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் கடந்த போட்டி போல இந்த முறையும் நங்கூரம் போட்டு நின்று ஆடினார். அரைசதம் கடந்த அவர் 53 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 18வது ஓவரில் தான் ஆட்டமிழந்தார். அப்போது ஜடேஜா களமிறங்கி, சாம் கர்ரனுடன் ஜோடி சேர்ந்தார். கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் இருந்தது சிஎஸ்கே. அப்போது ஜடேஜா பெர்குசன் வீசிய 19வது ஓவரில் 2 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் சிஎஸ்கே 20 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே வெற்றி:
கம்லேஷ் நாகர்கோட்டி வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சாம் கர்ரன் முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். 4வது பந்தை டாட் பால் ஆடிய ஜடேஜா அடுத்த பந்தில் சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ஜடேஜா அசத்தலாக சிக்ஸ் அடித்தார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.