Monday, March 2, 2026
IPL

அபுதாபி-IPL 2020: மும்பை அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றி !

அபுதாபி : மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

2020 ஐபிஎல் தொடர் நேற்று செப்டம்பர் 19 அன்று துவங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு 71, பாப் டுபிளெசிஸ் 55* குவித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

மும்பை பேட்டிங்:

மும்பை அணிக்கு ரோஹித் சர்மா, க்வின்டன் டி காக் துவக்கம் அளித்தனர். அந்த அணி அதிரடியாக ரன் குவித்தது. இடையில் விக்கெட்களை இழந்த போதும் ரன் குவிக்கும் வேகம் மட்டும் குறையவில்லை. டி காக் 33, திவாரி 42 ரன்கள் எடுத்தனர். ரோஹித் 12, சூர்யகுமார் 17, பாண்டியா 14, பொல்லார்டு 18 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சிஎஸ்கே அணி 5வது ஓவர் முதல் விக்கெட் வேட்டையைத் துவங்கியது. தீபக் சாஹர் 2, சாம் கர்ரன் 1, லுங்கி நிகிடி 3, பியுஷ் சாவ்லா 1, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர். சிஎஸ்கே அணி 9 விக்கெட்களை வீழ்த்தியது. ஜடேஜா 4 ஓவர்களில் 42 ரன்களை கொடுத்தனர்.மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது.

சென்னை பேட்டிங்:

சவாலான இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய சிஎஸ்கே அணிக்கு ஷேன் வாட்சன், முரளி விஜய் மோசமான துவக்கம் அளித்தனர். முரளி விஜய் 1, ஷேன் வாட்சன் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு சிஎஸ்கே அணியை மீட்டனர். இருவரும் நிதான ஆட்டம் ஆடி பின்னர் வேகம் எடுத்தனர். ராயுடு அதிரடி ஆட்டம் ஆடி 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். பாப் டுபிளெசிஸ் அரைசதம் அடித்தார்.

எனினும், ஓவருக்கு 10 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையிலேயே இருந்தது சிஎஸ்கே. கடைசி நான்கு ஓவர்களில் விக்கெட் வீழ்ச்சி ஏற்பட ஐந்தாம் வரிசையில் தோனிக்கு பதில் ஜடேஜாவும், அதன் பின் சாம் கர்ரனும் களமிறங்கினர்.

ஜடேஜா 5 பந்துகளில் 10 ரன்களும், கர்ரன் 6 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து தோனி இறங்கினார். கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்படும் நிலையில், டுபிளெசிஸ் முதல் பந்திலேயே ஃபோர் அடித்தார்.

சிஎஸ்கே வெற்றி:
அடுத்த பந்திலேயே அவர் 1 ரன் எடுக்க சிஎஸ்கே அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது.