டெல்லி அணியிடம் தோற்றாலும் பெங்களூரு அணி பிளேஆஃபுக்குத் தகுதி !
IPL 2020: விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி கடைசி நான்கு ஆட்டங்களில் தோல்வியை தழுவினாலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் பிளேஆஃபுக்குத் தகுதி பெற்றுள்ளது.
அபுதாபி: ஐபிஎல் போட்டியின் 55-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது. இந்த வெற்றியை அடுத்து பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த டெல்லி, தகுதிச்சுற்று ஆட்டத்துக்கு வந்துள்ளது. அதேபோல், பெங்களூரும் பிளே-ஆஃபுக்கு முன்னேறியது.
அபுதாபியில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடித்து வென்றது. டெல்லி பெளலர் அன்ரிச் நார்ட்ஜே ஆட்டநாயகன் ஆனார். இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் பிரவீன் துபே, ஷிம்ரோன் ஹெட்மயர், ஹர்ஷப் படேலுக்குப் பதிலாக அக்ஸர் படேல், டேனியல் சாம்ஸ், அஜிங்க்ய ரஹானேவும், பெங்களூர் அணியில் நவ்தீப் சைனி, குர்கீரத்சிங் மான் ஆகியோருக்குப் பதிலாக ஷாபாஸ் அகமது, ஷிவம் துபேவும் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற டெல்லி பந்துவீசத் தீர்மானித்தது.
.
பெங்களூர் பேட்டிங்:
பெங்களூர் பேட்டிங்கை ஜோஷ் பிலிப் – தேவ்தத் படிக்கல் தொடங்கினர். இதில் 1 பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்து ஜோஷ் பிலிப் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் தேவ்தத் நிதானமாக ரன்கள் சேர்க்க, கோலி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் ஆட வந்தார். மறுமுனையில், அரைசதம் கடந்த தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரிகள் உள்பட 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய கிறிஸ் மோரிஸூம் அதே ஓவரின் இறுதியில் டக் அவுட்டாகினார். பின்னர் வந்த ஷிவம் துபே 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 17 ரன்கள் சேர்த்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் வந்தார். மறுமுனையில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 35 ரன்கள் சேர்த்து டி வில்லியர்ஸ் வீழ்ந்தார். கடைசி விக்கெட்டாக இசுரு உதானா 1 பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தார். ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் சுந்தர் ரன்கள் இன்றியும், ஷாபாஸ் அகமது 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் நார்ட்ஜே 3, ரபாடா 2, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்..
டெல்லி பேட்டிங்:
பின்னர் டெல்லி இன்னிங்ஸை பிருத்வி ஷா – ஷிகர் தவன் தொடங்கினர். இதில் 2 பவுண்டரிகள் உள்பட 9 ரன்கள் சேர்த்த ஷா, 2-ஆவது ஓவரில் பெளல்டாகினார். அடுத்து வந்த அஜிங்க்ய ரஹானே, தவனுடன் இணைந்தார். டெல்லி ஸ்கோரை வேகமாக உயர்த்திய இந்தக் கூட்டணி, 2-ஆவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது. அரைசதம் கடந்த தவன் 6 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ரிஷப் பண்ட் களம் இறங்க, மறுமுனையில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 60 ரன்கள் சேர்த்திருந்த ரஹானே ஆட்டமிழந்தார். கடைசியாக களம் இறங்கிய ஸ்டாய்னிஸ், ரிஷப் பண்ட்டுன் இணைந்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். முடிவில் பண்ட் 1 பவுண்டரி உள்பட 8, ஸ்டாய்னிஸ் 1 சிக்ஸர் உள்பட 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் தரப்பில் ஷாபாஸ் அகமது 2, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
டெல்லி வெற்றி:
கடைசியில் டெல்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

