IPL 2020: சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியை பந்தாடி வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் !
2020 ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
டெல்லி அணி:
டெல்லி அணியின் ப்ரித்வி ஷா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் டக் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஹெட்மயர் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். விக்கெட் சரிந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 39, ரிஷப் பண்ட் 31 ரன்கள் எடுத்தனர்.
மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி:
17 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 100 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. பஞ்சாப் அணி அதுவரை ஆதிக்கம் செலுத்தி இருந்தது. அதன் பின் மார்கஸ் ஸ்டோனிஸ் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளினார். 18வது ஓவரில் 1 சிக்ஸ், 1 ஃபோர் அடித்தார்.
கடைசி ஓவர்:
அதன் பின் 19வது ஓவரில் 3 ஃபோர் அடித்தார். கடைசி ஓவரில் எப்படியாவது அணியை கரை சேர்க்க வேண்டும் என்ற முடிவில் அதிரடியாக ஆடினார். 2 சிக்ஸ், 3 ஃபோர் அடித்த அவர் கடைசி பந்து நோ பாலாக வீசப்பட்டது தெரியாமல், அணிக்காக இரண்டு ரன்கள் ஓடி ரன் அவுட் ஆனார்.
கடைசி ஓவரில் மட்டும் டெல்லி அணி 30 ரன்கள் எடுத்தது. ஸ்டோனிஸ் 21 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அவர் கடைசி 3 ஓவர்களில் மட்டுமே 49 ரன்கள் குவித்து மிரள வைத்தார். குறைந்த ஸ்கோர் எடுக்கும் என நினைத்த டெல்லி அணி, 157 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணி:
அதன்பின் பஞ்சாப் அணி திணறி திணறி ஆடியது. கே எல் ராகுல் உட்பட வரிசையாக எல்லா வீரர்களும் அவுட்டானார்கள். பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மயங்க் அகர்வால் மட்டுமே அதிரடியாக ஆடினார். டெஸ்ட் அணி வீரர் என்றாலும், எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் 89 ரன்களை எடுத்து அணியை மீட்டார்.
இந்த போட்டியில் கடைசி ஒரு பாலில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்ற நிலையில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது. அதன்பின் சூப்பர் ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்து டெல்லியிடம் தோல்வியை தழுவியது.

