Monday, March 2, 2026
National

துபாய்: ஓட்டுனரின் கவனக்குறைவால் சாலையில் தடம் புரண்ட பேருந்து.. விபத்தில் 10 பேர் காயம் !

துபாய்: இன்று அதிகாலை உம் சுகெய்ம் சாலையில் (Umm Suqeim Road) ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று காலை 6 மணிக்கு சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ரவுண்டானாவிற்கு அருகில் ஷேக் சயீத் சாலைக்குச் செல்லும் வழியில் ஏற்பட்டிருக்கிறது. பேருந்து ஓட்டுனரின் தூக்கமின்மையால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாலையின் வலப்பக்கம் உள்ள தடுப்பில் சென்று பேருந்து மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக பேருந்து இடப்பக்கம் தடம் புரண்டது.

இது குறித்து, பொதுப் போக்குவரத்துத் துறையின் இயக்குனர் ப்ரகதீர் சைஃப் முஹைர் அல் மஸ்ரோயி (Saif Muhair Al Mazrouei) கூறுகையில், “ஓட்டுனரின் அசதி மற்றும் தூக்கமின்மையின் காரணமாக பல பேருடைய உயிருக்கு ஆபத்து விளைவிக்க இருந்தார். இப்பேருந்தில் மொத்தம் 32 பயணிகள் பயணம் செய்தனர். விபத்து ஏற்பட்ட இடத்திற்கு காவல்துறை ரோந்துப் படையினர் மற்றும் மருத்துவ உதவிக்குழு விரைந்துவந்து காயமடைந்த நபர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்” என்று தெரிவித்தார்.

மேலும், “தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுனர்கள் போதுமான ஓய்வுடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதிகமான பயணிகளை அழைத்துச்செல்லும் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகளினால் நிகழும் உயிரிழப்புகள் அதிகம்” என்றும் மஸ்ரோயி எச்சரித்துள்ளார்.