துபாய் ஆட்சியாளர் அறிவித்த நற்செய்தி: 10 ஆண்டு கோல்டன் விசா !!
அமீரகத்தின் பிரதமரும் துணைத் தலைவரும் துபாயின் ஆட்சியாளருமான மதிப்பிற்குரிய ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை, பல துறைகளை சேர்ந்த நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு 10 ஆண்டு கோல்டன் விசாக்களை (10 Year Golden Visa) வழங்க ஒப்புதல் அளித்ததாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட செய்தி குறிப்பில், “அனைத்து PhD (பிஎச்டி) பெற்றவர்கள், அனைத்து மருத்துவர்கள், கணினித் துறைகள், எலக்ட்ரானிக்ஸ், புரோகிராமிங், எலக்ட்ரிகல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்டிவ் டெக்னாலஜி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அனைத்து பொறியியல் பட்டதாரிகளும் இந்த புதிய கோல்டன் விசாக்களைப் பெறமுடியும்” என்று அறிவித்துள்ளார்.

அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்கள் (3.8 அல்லது அதற்கு மேல்) பெறும் பட்டதாரிகளுக்கும் இந்த கோல்டன் விசாக்கள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கூறுகையில் “செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), பெரிய தரவு (Big Data) மற்றும் வைரஸ் தொற்றுநோயியல் (Viral epidemiology) ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பட்டதாரிகளுக்கும் இந்த விசாக்கள் வழங்கப்படும்” என்பது குறிப்பிடத்தக்கது.