வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு!
இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்துவரும் கொரோனா நோய்த்தொற்று காரணத்தால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடந்த வாரத்திலிருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல அனுமதியில்லை என்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு (சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை – மொத்தம் 30 மணி நேரம்) அமலில் இருக்கும் என்றும் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வர இருப்பதாக கூறியுள்ளது.
இப்புதிய அறிக்கையில் வெளிநாட்டிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு ஆன்லைன் பதிவு மூலம் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. “வெளிநாடுகளிலிருந்து விமானம் அல்லது கப்பல் மூலம் தமிழகத்திற்கு வரும் பயணிகள், மற்றும் புதுச்சேரியைத் தவிர பிற வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வரும் பயணிகள் “http://eregister.tnega.org” என்ற ஆன்லைன் முகவரியில் தங்களின் வருகை குறித்து பதிவு செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளது.
பயணிகள் தமிழநாட்டிற்குள் நுழையும்போது தங்களின் வருகைக்கான விபரங்களை ஆன்லைன் முகவரியில் பதிவு செய்த விவரத்தினை காண்பித்த பின்பே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

