அபுதாபியில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இலவச ஃப்ளு தடுப்பூசி (Influenza Vaccination) !
அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் (SEHA) அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இலவசமாக இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி (Influenza Vaccination) வழங்கும் என்று இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. அமீரகத்தின் மிகப்பெரிய சுகாதார நிறுவனமான SEHA இலவசமாக இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை அதன் அனைத்து சுகாதார மையங்களிலும் வழங்குவதாக அறிவித்துள்ளது. சில குறிப்பிட்ட மையங்களில் டிரைவ்-த்ரூ மூலமும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவைப்பட்டால், அபுதாபி மற்றும் அல் அய்னில் உள்ள குடியிருப்பாளர்களின் வீடுகளிலும் இந்த சேவையை வழங்குவதாகவும் SEHA அறிவித்துள்ளது.
அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைப்பு, அபுதாபி சுகாதாரத் துறை மற்றும் அபுதாபி பொது சுகாதார மையம் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட ‘உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், உங்கள் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ (Protect yourself, protect your community) என்ற பொது சுகாதார பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த இலவச தடுப்பூசி சேவையை வழங்குவதாக கூறியுள்ளது. இந்த பிரச்சாரமானது பருவகால காய்ச்சலைத் தடுப்பதில் தடுப்பூசியின் ஒருங்கிணைந்த பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், சுகாதாரத் துறையில் பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகின்றது.
தடுப்பூசியைப் பெற விரும்புபவர்கள் முன்னனுமதி பெறுவதற்கு 80050 என்ற எண்ணில் SEHA-வினைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
மேலும், தடுப்பூசிகளை குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டில் எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டாலும் வீடு சென்று தடுப்பூசி வழங்கப்படுவதற்கான சேவைக்கட்டணமாக ஒரு வீட்டுக்கு 500 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையினை பெற 027117117 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சேஹாவின் (SEHA) ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி டாக்டர் நூரா அல் கெய்தி கூறுகையில், “COVID -19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் இரண்டும் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தைத் தணிக்கவும் நோய்க்கான தடுப்பு மருந்துகளை பெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. அதிகமான மக்கள் தடுப்பூசி போடும்போது,COVID -19 மற்றும் பிற முக்கியமான மருத்துவ நிலைமைகளால் எதிர்கொள்ளும் சவால்களை நிர்வகிக்க சுகாதார வல்லுநர்கள் தங்கள் முயற்சிகளை அதிகம் அர்ப்பணிக்க முடியும்” என்று அறிவித்துள்ளார்.