இந்தியா: மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் 13 கொரோனா நோயாளிகள் தீ விபத்தில் பலி !
மும்பை புறநகர்ப் பகுதியான விராரில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் விஜய் வல்லாப் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஏர் கண்டிஷனிங் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து விசாரிக்க மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை, நாசிக் நகரில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் 24 க்கும் மேற்பட்ட நோயாளிகள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஆக்ஸிஜன் டேங்க் செயலிழந்ததால் இறந்தனர். இதனால் வளாகத்தில் அதிகளவில் வாயுகசிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் கிட்டத்தட்ட 160 பேரில் சுமார் 60 நோயாளிகள் ஆக்ஸிஜன் தேவைப்படும் ஆபத்தான நிலையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய இந்திய நகரங்களில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் அவசர கால கட்டத்தில் இதுபோன்ற ஆபத்துகள் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் நோயாளிகளின் எண்ணிக்கையால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, சிக்கலான பராமரிப்பு மற்றும் மருந்துகளுக்கான நிலையான தேவை போன்ற சூழ்நிலைகளை கையாள்வது மிகக்கடினமான ஒன்றாகும் என்பது கவலைக்குரிய விடயமாகும்.