Sunday, October 19, 2025
Cricket

இந்தியா – இங்கிலாந்து 5 வது டி20 யில் இந்தியா அபார வெற்றி ! தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது !

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் இறுதி டி20 போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – விராட் கோலி களமிறங்கினர்.

இந்தியா – பேட்டிங்:
அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்களை குவித்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். இதில் 4 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் 32 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஜோர்டனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும், சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் தனது 28வது அரை சதத்தை பூர்த்திசெய்தார். இந்நிலையில், அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஹர்திக் பாண்டியா 39 ரன்களை எடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தது.

இங்கிலாந்து – பேட்டிங்:
225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய் ஆட்டத்தின் முதல் ஓவரில் புவனேஷ்குமார் வீசிய 2வது பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த பட்லர் – டேவிட் மலான் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை தெறிக்க விட்டு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். இதனால் உடனடியாக புவனேஷ் குமாரை பந்துவீச அழைத்த கோலி பட்லரை 52 ரன்களுக்கு வெளியேற்றினார்.அடுத்து களமிறங்கிய பேர்ஸ்டோ (7), கேப்டன் மோர்கன் (1), பென் ஸ்டோக்ஸ் (14) , ஜோர்ட்ன் (11), ஆர்ச்சர் (1) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

இந்தியா அபார வெற்றி:

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3 -1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.