Friday, October 17, 2025
GovernmentNational

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மற்றும் புதுப்பிக்க இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு !

அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. அதில், ஏற்கனவே காலாவதியான மற்றும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் காலாவதியாகக்கூடிய பாஸ்போர்ட் அல்லது அமீரக ரெசிடென்சி விசாக்களை வைத்திருக்கும் இந்தியர்கள் மட்டுமே அவற்றைப் புதுப்பித்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதுகுறித்த மறு அறிவிப்பு வரும் வரையிலும் இந்நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்காக சமூக இடைவெளியை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்ற குறிப்பிட்ட அளவிலான விண்ணப்பங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுவதாக தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும் எவருக்கேனும் அவசர பாஸ்போர்ட் தேவை இருந்தால் அவர்கள் உடனடியாக cons.abudhabi@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இவர்கள் கட்டாயமாக தங்களது அவசரத்திற்கான காரணம் குறித்து அம்மின்னஞ்சலில் விளக்கியிருக்க வேண்டும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களை ஸ்கேன் செய்து மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இம்மாதிரியான மின்னஞ்சல்களுக்கு உடனடியாக பதிலளிப்பதுடன் மேலும் அவர்களுக்கு வேண்டிய தூதரக சேவைகளும் உடனடியாக வழங்கப்படும் என தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த மறு அறிவிப்பு வரும் வரையில் மேற்கூறிய விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் தூதரகம் இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.