Friday, October 17, 2025
National

அமீரகம் வழியாக சவூதி அரேபியா மற்றும் குவைத் நாட்டிற்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்குத் தடை !

அமீரகம் வழியாக சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டிற்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் திங்கட்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியன் மிஷன் ட்விட்டரில் வெளியிட்ட ஆலோசனையில், கொரோனா தொற்றால் பயணிகளுக்கு அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியர்கள் துபாய் மற்றும் அபுதாபி வழியாக அண்டை நாடான சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டிற்கு செல்ல முடியாது என்று கூறியுள்ளது.

அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் அனைத்து பயணிகளும் இந்தியாவுக்குத் திரும்புவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், தாங்கள் செல்லும் நாட்டில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து கொண்ட பின்னரே தங்களின் பிற பயண திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டிசம்பர் 2020 முதல், சவுதி அரேபியாவுக்கு செல்ல விரும்பிய சுமார் 600 இந்தியர்கள் அமீரகத்தில் சிக்கித் தவிப்பதாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், “சமீபமாக அதிகரித்து வரும் சர்வதேச பயண நெறிமுறைகள் காரணமாக, அமீரகத்தில் பயணிகள் சிக்கித் தவிப்பதன் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக, ட்ரான்சிட் வழிகளைப் பயன்படுத்தி சவூதி அரேபியா மற்றும் குவைத் நாட்டிற்கு செல்வதைத் தவிர்க்குமாறு பயணிகள் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றனர்”

“முன்னதாக, பயணிகளுக்கு கேரள முஸ்லீம் கலாச்சார மையம் (கே.எம்.சி.சி) மற்றும் பிற சமூக அமைப்புகளின் உதவியுடன் சிறப்பு பயண ஏற்பாடு வழங்கப்பட்டது. இதுபோன்ற வசதிகள் இனி வழங்கப்படாது” என்று கூறினார்.

இந்தியன் மிஷனின் ஆலோசனையில் “இந்தியாவிலிருந்து ஒரு பயணத்தைத் தொடங்குவதற்கு முன், அனைத்து இந்திய நாட்டினரும் தங்களது இறுதி இலக்கு நாட்டின் (Destination Country) சமீபத்திய கோவிட் -19 தொடர்பான பயண வழிகாட்டுதல்களைக் கண்டறிய அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.