கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் போராடி தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் !
துபாய்: 2020 ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடினர். இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
பஞ்சாப் பேட்டிங்:
ஹைதராபாத் அணி டாஸ் வென்று, பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. 5 ஓவர்களில் பஞ்சாப் அணி 37 ரன்கள் எடுத்த நிலையில் மந்தீப் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் கெயில் பந்துகளை வீணடிக்கத் துவங்கினார். ராகுலும் நிதான ஆட்டம் ஆடினார். ரன் ரேட் சரிவால் பஞ்சாப் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து விக்கெட்கள் சரியத் துவங்கின. ராகுல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் கெயில் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். மேக்ஸ்வெல் 12, ஹூடா 0, கிறிஸ் ஜோர்டான் 7, முருகன் அஸ்வின் 4 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
நிக்கோலஸ் பூரன் தனி ஆளாக அணியை காக்க போராட்டம் நடத்தினார். அவருக்கு யாரும் ஒத்துழைக்காத நிலையில் அவரும் தற்காப்பு ஆட்டத்தை ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார் நிக்கோலஸ் பூரன். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ரஷித் கான் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். சந்தீப் சர்மா 2, ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் வீழ்த்தினர். தமிழக வீரர் நடராஜன் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
ஹைதராபாத் பேட்டிங்:
ஹைதராபாத் அணிக்கு துவக்கம் சிறப்பாக அமைந்தது. வார்னர் – பேர்ஸ்டோ பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்த்தனர். பேர்ஸ்டோ 19, வார்னர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மனிஷ் பாண்டே 15, அப்துல் சமத் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினர். அடுத்து விஜய் ஷங்கர் அணியை காப்பாற்ற போராடினார். வெற்றி இலக்குக்கு அருகே நெருங்கிய உடன் அவர் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். 110 முதல் 114 எடுப்பதற்குள் ஹைதராபாத் அணி 6 விக்கெட்களை இழந்து ஆல் – அவுட் ஆனது.
பஞ்சாப் வெற்றி:
பஞ்சாப் அணி யாருமே எதிர்பாராத வகையில் கடைசி 3 ஓவர்களில் விக்கெட் வேட்டை நடத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ் ஜோர்டான் 3, அர்ஷ்தீப் 3 விக்கெட் வீழ்த்தினர். இவர்கள் தான் கடைசி 3 ஓவர்களில் வரிசையாக விக்கெட் வீழ்த்தினர்.