Saturday, October 18, 2025
National

துபாயில் மீண்டும் திறக்கப்படவிருக்கும் மிராக்கிள் கார்டன் (Miracle Garden) !

அமீரகத்தில் பார்வையாளர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் மில்லியன் கணக்கிலான பூக்களுடன் இயற்கை எழில் மிகுந்த துபாய் மிராக்கிள் கார்டன் (Miracle Garden) அதன் ஒன்பதாவது சீசனை வருகிற நவம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு மீண்டும் துவங்கப்படவுள்ள மிராக்கிள் கார்டனில் கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் கடுமையாகப் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிராக்கிள் கார்டனில் 120 க்கும் மேற்பட்ட வகைகளின் 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் வளைகுடா நாடுகளில் வளர்க்கப்படாத பூ வகைகள் உட்பட பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் 400 மீட்டர் நடைபயிற்சி பாதை பார்வையாளர்களுக்கு பல வகையான பூக்களின் மத்தியில் நடந்து செல்லும் ஒரு அரிய வாய்ப்பை அளிக்கிறது.

மேலும், இங்கு பார்வையாளர்களுக்காக நேரடி பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இரவு நேரங்களில் மின்னும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிற்பங்களைக் காட்சிப்படுத்தி புதிய அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை நேரம்:
வார நாட்கள் – தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.
வார இறுதி நாட்கள் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) மற்றும் பொது விடுமுறை நாட்கள் – காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை.

நுழைவுக்கட்டணம்:
பெரியவர்கள் (12 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 55 திர்ஹம்ஸ்.
12 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்களுக்கு 40 திர்ஹம்ஸ்.
மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை.